2022 ஆம் வருடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பாக இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அரசு தரப்பில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலா கொலையில் முக்கிய குற்றவாளியான கனடா நாட்டை சோ்ந்த கோல்டி பிராரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் என்ஐஏ எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், அது உறுதிசெய்யப்படவில்லை. அவருக்கு எதிராக சா்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2021-ம் வருடத்தில் 61 பயங்கரவாத வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டது. அதேபோல் 2019, 2020 ஆம் வருடங்களில் சராசரியாக 60 பயங்கரவாத வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.