ரியான் டெக் நிறுவனத்தின் சார்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 18 சென்னை பள்ளிகளில் ஒரு வகுப்பறைக்கு மூன்று லட்சம் மதிப்பீட்டில் காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் வரைபட்டிகை போன்றவை ஜப்பான் எண்ம தொழில்நுட்ப சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, இருசப்பா தெரு சென்னை உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்னை நடுநிலைப்பள்ளி, கொய்யா தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி என ஐந்து பள்ளிகளில் இந்த தொழில்நுட்ப சாதனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இந்த புதிய கல்வி கற்கும் முறையை சிந்தாதிரிப்பேட்டை, மேற்கு கூவம் ஆற்று சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மண்டல குழு தலைவர்கள் எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் ரா.ஜெகதீசன், பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு மற்றும் ரியான் டெக் நிறுவன இயக்குனர் ஸ்டீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலமாக ஆசிரியர்களின் கற்பித்தல் முறை மாணவர்களின் கற்றல் முறை எளிதாக்கப்பட்டு பொது தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளை சுலபமாக மாணவர்கள் எதிர்கொள்ள முடிகிறது.