பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு பாரம்பரியத்தை தக்கவைக்கும் அகப்பை தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதியதாக அறுவடை செய்யப்பட்ட புது நெல்லை கொண்டு பச்சரிசியாக்கி அதை மண் பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் வழக்கம் காலகாலமாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் அகப்பை வாயிலாக பொங்கல் தயாரிக்கும் பழக்கம் ஒரு சில கிராமங்களில் மட்டும்தான் நீடித்து வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் அருகில் உள்ள வேங்கராயன்குடிக்காடு எனும் கிராமத்தில் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

அதற்கென அந்த கிராமத்தில் உள்ள தச்சுத் தொழிலாளர்கள் அகப்பையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக ஒரு படி நெல், தேங்காய், வெற்றிகை பாக்கு, வாழைப்பழம் மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இப்பழக்கம் வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் காலகாலமாக நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் பெருமை தெரிவிக்கின்றனர்.