48 ஆண்டுகால வரலாற்றில் 2 முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்தியர்கள் என்ற பெருமையை கோலி மற்றும் அஸ்வின் பெற வாய்ப்புள்ளது.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இறுதி அணியை இந்திய கிரிக்கெட் அணி நேற்று  அறிவித்துள்ளது. உலகக் கோப்பைக்கான 15 வீரர்களின் பெயர்களை செப்டம்பர் 5 ஆம் தேதியே பிசிசிஐ அறிவித்தது. அதே சமயம் இந்த அணியில் மாற்றம் செய்ய நேற்று செப்டம்பர் 28 ஆம் தேதி தான் கடைசிநாளாக இருந்தது. இந்நிலையில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் வடிவில்  நிகழ்ந்துள்ளது. ஆம் அக்ஷர் படேலுக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்த்தது இந்திய அணி. ஆசிய கோப்பையின் போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அக்ஷர் படேல் காயமடைந்தார்.

இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் கூட அவரால் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் தான் நேற்று தமிழக வீரர் அஸ்வின் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். உலக கோப்பையில் அனுபவம் வாய்ந்த தமிழக வீரர் அஸ்வின் இல்லாததால் கேள்வி எழுந்த நிலையில், தற்போது அவர் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் இதில் சிறப்பு என்னவென்றால், 2023 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களில் விராட் கோலி மற்றும் ரவி அஸ்வின் ஆகிய 2 பேர் மட்டுமே 2011 ஒருநாள் உலக கோப்பை இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்கள் ஆவர். அதாவது, கோலி, அஸ்வினை தவிர்த்து 2023 உலக கோப்பையில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுமே 2011 ஒருநாள் உலக கோப்பையில் இடம்பிடிக்கவில்லை.

ஒருவேளை இந்தியா உலகக் கோப்பையை வென்றால் 48 ஆண்டுகால வரலாற்றில் 2 முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்தியர்கள் என்ற பெருமையை கோலி மற்றும் அஸ்வின் பெறுவார்கள். 2011ல் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது போல, ரோஹித் தலைமையில் இந்தமுறை கோப்பையை வென்றால் இந்த சாதனை நிகழும். கோலி மற்றும் அஸ்வின் வரலாறு படைப்பார்களா  என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

இதற்கிடையே உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கவுகாத்தி சென்றடைந்தது. இந்திய அணி இங்கிலாந்துடன் செப்டம்பர் 30-ம் தேதி கவுகாத்தியில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணியின்  இரண்டாவது பயிற்சி ஆட்டம் திருவனந்தபுரத்தில் அக்டோபர் 3ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிராக உள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இரு அணிகள் மோதும் இந்த முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இது தவிர, இந்திய கிரிக்கெட் அணி தனது பயணத்தை அக்டோபர் 8 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பையில் இந்திய அணியின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுடன் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ்.