உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இறுதியாக விசா கிடைத்தது..

2023 உலக கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த உலக கோப்பைக்காக ஒவ்வொரு அணிகளாக இந்தியாவிற்கு வந்துகொண்டிருக்கின்றன. தென்னாப்பிரிக்க அணி நேற்று இந்தியாவுக்குள் நுழைந்தது. அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக் கோப்பைக்காக இந்தியா வர உள்ளது. அதாவது, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்துள்ளது. பாகிஸ்தான் அணி இந்திய அரசிடம் இருந்து விசா பெற்றுள்ளது. பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தானுக்கும் விசா கிடைத்துள்ளது. விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், விசா கிடைத்துள்ளது.

உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் அணி புதன்கிழமை செப்டம்பர் 27ஆம் தேதி இந்திய மண்ணை (ஐதராபாத்) அடையும். பாகிஸ்தான் அணி இந்தியா வர இன்றுடன் சேர்த்து இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. அந்த அணிக்கு நேற்று திங்கள்கிழமை விசா கிடைத்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்தது.

பிசிபி ஐசிசியிடம் புகார் :

விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மிகவும் கோபமாக இருந்தது. பிசிபி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)மீது அதிருப்தியில் இருந்ததோடு, விசா கிடைப்பதில் தாமதம் குறித்தும் புகார் செய்தது. பாகிஸ்தானுடன் இதுபோன்ற சமத்துவமற்ற அணுகுமுறையை ஏற்க முடியாது என்றும் அது கூறியது. விசா தாமதமானது பாகிஸ்தான் அணியின் தயார்நிலையை பாதிக்கும் என்று பிசிபி ஐசிசியிடம் தெரிவித்திருந்தது. ஆனால், விசா நடைமுறையில் வழக்கமான நிர்வாக நடைமுறையே பின்பற்றப்பட்டதாக ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்தன.  

பயிற்சி ஆட்டம் ஐதராபாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது :

பாகிஸ்தான் தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை அக்டோபர் 6-ம் தேதி ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது.

உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி :

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), அப்துல்லா ஷபிக், ஃபக்கர் ஜமான், ஹசன் அலி, இப்திகார் அகமது, இமாம் உல் ஹக், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் அப்ரிடி, உசாமா மிர், சவுத் ஷகீல், ஹாரிஸ் ரவுப் , முகமது வாசிம் ஜூனியர்.

 காத்திருப்பு வீரர்கள் : முகமது ஹாரிஸ், அப்ரார் அகமது, ஜமான் கான்

வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.