இந்த இரு அணிகளுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் கணித்துள்ளார்..

இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அக்டோபர் 5 முதல் இந்த மெகா உலக கோப்பை திருவிழா தொடங்கவுள்ளது. இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் உலகக் கோப்பை தொடங்கவுள்ளது. இந்தியாவின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கோப்பையை வெல்வதற்கான முதல் 4 அணிகளை தேர்வு செய்தும், இறுதிப்போட்டிக்கு செல்லும் அணிகள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒரு பெரிய கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் என்று வாட்சன் நம்புகிறார்.

ஷேன் வாட்சன் கூறியதாவது, கடந்த சில மாதங்களில் ஆஸ்திரேலிய அணி நிச்சயமாக சில சிக்கல்களை எதிர்கொண்டது, ஆனால் அணி எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது தெரியும். இப்போது அனைத்து முக்கிய வீரர்களும் உலகக் கோப்பைக்கு கிட்டத்தட்ட முழுமையாக தகுதி பெற்றுள்ளனர். அணியில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் எப்படி விளையாடுவது என்பது தெரியும் என்றார்.

மேலும் ஷேன் வாட்சன்,  இந்திய அணி உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்று கணித்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நிச்சயம் பயனடையும் என்றார். ஏனென்றால் அவர்களுக்கு இங்குள்ள நிலைமை நன்றாகவே தெரியும். அவரது பேட்டிங்குடன், அவரது பந்துவீச்சும் இப்போது வலுவாக உள்ளது, குல்தீப் யாதவின் செயல்திறன் நம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த சைனாமேன் ஸ்பின்னரின் ஆட்டத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில் குல்தீப் அபாரமாக பந்துவீசினார். அவர் சிறப்பாக பந்துவீசியதற்காக போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்று கூறினார்.