ஒருநாள் தொடரில் 3000 சிக்ஸர்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எடுத்த மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும். ஆனால் இதற்கு முன்பே இந்திய அணி இந்தப் போட்டியில் உலக சாதனை படைத்தது.

இந்திய அணியின் உலக சாதனை :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸின் போது இந்த போட்டியில் மொத்தம் 18 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 3000 சிக்சர்களை கடந்த உலகின் முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 6 சிக்ஸர்களும், சுப்மன் கில் 4 சிக்ஸர்களும், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தலா 3 சிக்ஸர்களும், இஷான் கிஷன் 2 சிக்ஸர்களும் விளாசினர். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது மொத்தம் 3007 சிக்சர்களை அடித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் (2953) இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் (2566) மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலியா (2476) நான்காவது இடத்திலும், நியூசிலாந்து (2387) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

தொடரை வென்ற இந்திய அணி  :

இந்தப் போட்டியில் சுப்மன் கில் (104), ஷ்ரேயாஸ் ஐயர் (105) ஆகியோரின் சதத்தின் அடிப்படையில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. இதனையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 52 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்தனர். ஆனால் இறுதியில் சூர்யா 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்து அணியின் மொத்த எண்ணிக்கையை 399 ரன்களுக்கு கொண்டு சென்றார்.

பின்னர் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி இலக்கை துரத்தியபோது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு பின், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ஓவருக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக சீன் அபோட் 54 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4வது அதிகபட்ச ஒட்டுமொத்த ஸ்கோர் ஆகும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் :

481/6 – இங்கிலாந்து, நாட்டிங்ஹாம், 2018

438/9 – தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க், 2006

416/5 – தென்னாப்பிரிக்கா, செஞ்சுரியன், 2023

399/5 – இந்தியா, இந்தூர், 2023

383/6 – இந்தியா, பெங்களூரு, 2013