உலகக் கோப்பையின் முதல் போட்டியை ஆடிய உடனேயே ஒரு பெரிய சாதனையை செய்யவுள்ளார் விராட் கோலி.

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் முதல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த முறை உலகக் கோப்பையில் இந்திய அணியில் பல ஜாம்பவான்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும், அவர்களில், விராட் கோலி மட்டுமே 4வது ஒருநாள் உலகக் கோப்பையை விளையாடும் ஒரே வீரர் ஆவார்.

விராட் கோலி 4வது ஒருநாள் உலகக் கோப்பையை விளையாடுகிறார் :

இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாடும் போதே 4 முறை உலகக் கோப்பையில் விளையாடிய வீரர் என்ற சாதனை படைப்பார் விராட் கோலி. இந்த பட்டியலில் ஏற்கனவே பல வீரர்கள் உள்ளனர். கபில்தேவ், சுனில் கவாஸ்கர், முகமது அசாருதீன், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே, எம்எஸ் தோனி ஆகியோர் 4 உலகக் கோப்பைகளில் விளையாடிய வீரர்களில் அடங்குவர். இப்போது இந்த பட்டியலில் விராட் கோலியின் பெயரும் சேரப் போகிறது. விராட் கோலி ஏற்கனவே 2011, 2015, 2019 ஆகிய 3 உலக கோப்பைகளில் ஆடியுள்ளார்.. 

சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார் :

அனுபவம் வாய்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்க்கையில் மொத்தம் 6 ஒருநாள் உலகக் கோப்பைகளை விளையாடியதன் மூலம் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டட் 6 உலக கோப்பைகளில் விளையாடியுள்ளார். இது தவிர, ரிக்கி பாண்டிங், மஹேல ஜெயவர்த்தனே, ஜாக் காலிஸ், கிறிஸ் கெய்ல், அரவிந்த டி சில்வா உள்ளிட்ட பல வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் தலா 5 ஒருநாள் உலகக் கோப்பைகளை விளையாடியுள்ளனர்.

22 வயதில் தனது முதல் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடினார் :

விராட் கோலி தனது 22 வயதில் 2011 ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் 100* (83) ரன்கள் எடுத்தார்.  இதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அற்புதமான 59 ரன்களையும், இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக முக்கியமான 35 (49) ரன்களையும் எடுத்தார் விராட் கோலி.