
பெரு நிறுவனங்களில் இன்றைய காலப் பணிச்சூழல் உடல் பருமன் மற்றும் உடல் நலத்தை பாதிக்கிறது. அதாவது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் அதிகமான அழுத்தம் ஆகியவை உடல் பருமனுக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது. பல நிறுவனங்களில் வேலைகளில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது உடல் எடையை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதே பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெங்களூருவை சேர்ந்த ஒரு பெரு நிறுவன ஊழியர் ஒருவர் தனது வேலை குறித்து மற்றும் உடல் நலம் குறித்து வருத்தமான பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நான் உண்மையிலேயே இறந்து கொண்டிருக்கிறேனா?. என்னை போலவே பெரும்பாலானோர் இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த நச்சுத்தன்மை வாய்ந்த வேலை கலாச்சாரத்தில் சிக்கி கிட்டத்தட்ட 3 வருடங்களாக தவித்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது 14 முதல் 16 மணி நேரம் வேலை செய்கிறேன். அதனால் எனது தூக்கம் முற்றிலும் குழப்பமாகியுள்ளது.
சில நேரங்களில் அதிகாலை 2 மணிக்கும் , சில நேரங்களில் இரவு 11 மணிக்கு தூங்குகிறேன். ஆனால் காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருப்பேன். பெரும்பாலான நேரங்களை எனது சொந்தப் பணிகளுக்கு செலவிடாமல் சக ஊழியர்களுக்கு உதவுவது குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிப்பது என கழித்துள்ளேன். அதாவது என் வாழ்வின் மறுபக்கம் மிகவும் வேதனையானது.
எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பதே இல்லாமல் ஆகிவிட்டது. நான் கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகளில் எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. பெங்களூருவில் உள்ள முக்கியமான இடங்களுக்கு கூட பயணம் செய்ய நேரமில்லை. என்னுடைய இந்த பணி சூழலால் எனது காதலியை புறக்கணித்து விட்டேன். என் வாழ்க்கையில் இருந்த ஒரே நிலையான விஷயம் அவள் தான். தற்போது மிகவும் சோர்வடைந்து விட்டேன்.
என்னால் ஒரு சமநிலையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியவில்லை. நான் ஒரு முழு நேர நிறுவன அடிமையாகி விட்டேன். கடந்த 2022 இல் நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து தற்போது எனது எடை 24 கிலோ அதிகரித்துவிட்டது. எனது பெற்றோர் என்னை நினைத்து மிகவும் கவலைப்படுகிறார்கள். நான் பெரும்பாலான விடுமுறைகளை ரத்து செய்தேன். வார இறுதி நாட்களையும் வேலைக்காக கழித்து விட்டேன்.
எப்போதுமே வேலைக்கு முதலிடம் கொடுத்தேன். பதிலுக்கு நான் பணம் அதிகமாக சம்பாதிக்கிறேன். இருப்பினும் திரும்பிப் பார்க்கும்போது என் வாழ்வில் எந்த மகிழ்ச்சியும் இல்லை, ஒரு குறிப்பிட்ட சரியான இடைவெளி எடுக்க எனக்கு நேரமோ சக்தியோ இல்லை”என தனது பணிச்சூழல் குறித்து வருத்தமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.