தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் கிராமத்தில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு தெய்வானை வட்ட கானம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு விதவைகளுக்கான முன்னுரிமையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தெய்வானை அத்திமுட்லு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தெய்வானை போலியாக சான்றிதழ் தயாரித்து விதவை எனக்கூறி பணி ஆணை பெற்றதாக சரோஜா என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் தெய்வானை மறு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும், விதவை எனக்கூறி போலியான சான்றிதழ் தயாரித்து வேலையை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடத்திய விசாரணையில் தெய்வானை மறு திருமணம் செய்து கொண்டு விதவை சான்றிதழ் வாங்கி வேலையில் சேர்ந்தது தெரியவந்தது. இதனால் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெய்வானையை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.