
தமிழக முழுவதும் அதிமுக கட்சியினர் தீவிரமாக கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி தனது பிறந்தநாள் விழாவில் பேசியது குறித்து ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, தமிழக துணை முதல்வர் உண்மையை கூறாமல் அதனை மூடி மறைப்பதில் வல்லவராக உள்ளார். தமிழகம் முழுவதும் எடப்பாடி தலைமையில் நடைபெறும் கள ஆய்வு பணியை கிண்டல் செய்யும் விதமாக கலவர ஆய்வுப் பணி என கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கள ஆய்வு பணியில் அதிமுகவினர் கூட்டத்தில் 2 கோடி பேர் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கள ஆய்வு பணி மூலம் மக்களுக்கு எழுச்சியும், நம்பிக்கையும் வருகிறது. ஆனால் இன்று திமுகவால் தனித்து நின்று இது போன்ற கட்டமைப்பை உருவாக்க முடியாது. திமுகவினர் கூட்டணி என்ற பொய்க்கால் குதிரை மூலமே உயரமாக தெரிகின்றனர். உண்மையை ஆராய்ந்து பார்த்தால் நிலவரம் என்ன என்பது தெரிய வரும்.
சில மாவட்டங்களில் கள ஆய்வு குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் இதனை கலவரம் நடைபெறுவது போல உண்மையை மறைத்து பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது. அதிமுக கட்சியினை எடப்பாடியார் மிகவும் தன்னம்பிக்கையோடு எழுச்சி மிகுந்த கட்சியாக உருவாக்கி வருவது துணை முதல்வருக்கு பொறுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.