ஜப்பானில் ஜூலை 5ஆம் தேதி மிகப் பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்கிற தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வதந்திக்கு காரணம், “புதிய பாபா வங்கா” என அழைக்கப்படும் தீர்க்கதரிசி ரியோ டட்சுகி முன்பு கூறிய கணிப்பு தான்.

அதாவது டட்சுகி, கடந்த 2011ல் ஏற்பட்ட ஜப்பான் சுனாமி, டயானா இறப்பு, கொரோனா போன்ற பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்திருந்ததால், அவரின் இந்த கணிப்பும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஜப்பானில் உள்ள மக்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு மக்கள் பலரும் பயந்த நிலையில், விமான டிக்கெட்டுகளை ரத்து செய்து வருகின்றனர்.

ஹாங்காங், சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து பயணிகள், ஜப்பான் சுற்றுலாவை புறக்கணித்துள்ளனர். இதன் விளைவாக, ஜப்பானின் சுற்றுலா துறையில் மட்டும் ரூ.33,200 கோடி (3.9 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த வதந்திகள் பரவும் நேரத்தில், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் டோகாரா தீவுகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் ஷின்மோ எரிமலை வெடிப்பு நடந்தது.

இதனால் மக்கள் பயம் அடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் “உலகம் அழியும்” என்ற வீடியோக்கள் மற்றும் சித்திரிப்புகள் பரவத் தொடங்கியுள்ளதால்,  மக்கள் மனதில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலைமைக்கு பதிலளித்த ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம், ஜூலை 5ஆம் தேதிக்கான எந்த சுனாமி எச்சரிக்கையும் இல்லை என தெளிவாக அறிவித்துள்ளது.

மேலும், டட்சுகியும், “நான் தற்போது எந்த தீர்க்கதரிசனங்களும் பெறவில்லை, கணிப்புகளை நிறுத்திவிட்டேன்” என தெரிவித்துள்ளார். நிபுணர்களும், பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.