முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி  முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது..

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தியது. விண்டீஸ் அணியை 150 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40, ரோஹித் சர்மா 30 ரன்களுடன் கிரீஸில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 70 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.. ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த முடிவை தவறு என்று நிரூபிக்கும் வகையில் பந்து வீசினார். விண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிரேக் பிராத்வைட் 20 மற்றும் டெக்னாராயன் சந்தர்பால் இருவரும் 12 ரன்கள் எடுத்து அஷ்வின் சுழலில் சிக்கினர்.

ஷர்துல் தாக்கூர் 2 ரன்களில் ரமோன் ரைஃபரை அவுட் செய்து விண்டீஸ் அணிக்கு மூன்றாவது அடி கொடுத்தார். அதன்பிறகு, ஜடேஜா பிளாக்வுட்டை 14 ரன்களில் அவுட் செய்தார். மதிய உணவு இடைவேளையின் போது மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மதிய உணவுக்குப் பிறகு ஜடேஜா 2 ரன்களில் ஜோசுவா டா சில்வாவையும், சிராஜ் 18 ரன்களில் ஹோல்டரையும் வெளியேற்றினர்.

அஸ்வின் அல்சாரி ஜோசப்பை தனது 700வது விக்கெட்டாக (3 வகை கிரிக்கெட்) எடுத்தார். இதன்மூலம் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜனுக்குப் பிறகு இந்த கிளப்பில் நுழைந்த மூன்றாவது பந்துவீச்சாளர் இவர்.மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக அலிக் அதான்ஜே 47 ரன்களில் ஆட்டமிழந்தார். கார்ன்வால் ஆட்டமிழக்காமல் 19 ரன்கள் எடுத்தார், வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் தனது டெஸ்ட் கேரியரில் 33வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர்  பேட்டிங் செய்ய களமிறங்கினர். இருவரும் இணைந்து புதிய பந்தை சிறப்பாக எதிர்கொண்டனர். இந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டை கொடுக்காமல் சிறப்பாக ஆடினர்.

ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் நாள் ஆட்டம் முடியும் வரை கிரீஸில் இருந்தனர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 30 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும். இன்று 2வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7: 30 மணிக்கு தொடரும்..