இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புத்தாண்டு தினம் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த யுகாதி பண்டிகை கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதிகளில் உள்ள வேலூர், திருவள்ளூர் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த யுகாதி பண்டிகையின் போது அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவர். அதன் பிறகு வீட்டில் மாவிலை தோரணங்களை கட்டி வண்ண கோலமிட்டு பெருமாள், கணபதி மற்றும் சிவன் போன்ற தெய்வங்களை வழங்குவார்கள்.

இந்த நாளில் அம்பிகை வழிபாடு விசேஷமானதாக கருதப்படுகிறது. அதன் பிறகு யுகாதி பண்டிகையில் பூஜை செய்யும் போது பாட்டு படிப்பதோடு, தெலுங்கு மக்கள் பணியாரம், பூரன் போளி, பால் பாயாசம், புளியோதரை போன்றவற்றை நைய்வேத்தியமாக சுவாமிக்கு படைக்கிறார்கள். அதோடு இந்த ஆண்டின் புதிய பஞ்சாகத்தையும் பூஜையில் வைப்பார்கள்.‌ இந்நிலையில் யுகாதி பண்டிகையின் முக்கிய சிறப்பம்சம் பச்சை பச்சடி. அதாவது இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு என அறுசுவை கலந்த பச்சை பச்சடி செய்கிறார்கள்.

இந்த பச்சை பச்சடி வாழ்வின் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி போன்றவற்றை உணர்த்தும் விதமாக செய்யப்படுகிறது. இந்த பச்சை பச்சடியை வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய் மற்றும் மாவடு போன்றவற்றை சேர்த்து செய்கிறார்கள். அதன் பிறகு யுகாதி பண்டிகையின் போது பொதுமக்கள் ஒரு இடத்தில் கூடி கலை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். மேலும் இந்த வருடம் மார்ச் மாதம் 22-ம் தேதி புதன்கிழமை அன்று யுகாதி பண்டிகை வர இருக்கும் நிலையில், பண்டிகையை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.