
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன். இவர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு விஷயங்களை பேசி உள்ளார். குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் வருகை பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலமாக ஒட்டுமொத்த திரை உலகையும் தன் கைக்குள் வைத்து ஆட்டி படைக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான். ஏனெனில் உதயநிதி அவ்வளவு அக்கிரமங்களை செய்துள்ளார். நடிகர் விஜய் முதல் மாநாட்டை நடத்தும்போது மது ஒழிப்பை கொண்டு வருவேன் என்று நிச்சயம் அறிவிப்பார்.
அதோடு தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுவதுமாக அமல்படுத்தப்படும் என்றும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தன்னுடைய முதல் கையெழுத்து அதுவாக தான் இருக்கும் என்றும் மாநாட்டில் அறிவிப்பார். இதை எப்படியோ முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை மூலமாக தெரிந்து கொண்டார். அதனால்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை வைத்து மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். திமுகவிடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க முடியுமா.? அப்படி கேட்டால் அடுத்த முறை இந்த இரண்டு சீட்டுகள் கூட கிடைக்காமல் போய்விடும் என்று கூறினார். மேலும் நடிகர் விஜய் மது ஒழிப்பு மாநாட்டை தமிழகத்தில் அமல்படுத்துவார் என்று மணிகண்டன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.