
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை முழுவதுமாக முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங்க் கமெண்டேர் வியோமிகாசிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளனர்.
அதில் கர்னல் சோபியா குரேஷி தெரிவித்ததாவது, இந்தியாவின் ராணுவ பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அதனால் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்களது அனைத்து ஆயுதங்களும் முறியடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தான், இந்தியா மீது ஏவிய ட்ரோன் விமானங்கள் அனைத்தும் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை. பாகிஸ்தான் ராணுவம் சுமார் 400 ட்ரோன் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டது. அவை அனைத்தையும் முறியடித்து இந்திய ராணுவம் நடத்திய பதிலளித்த தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
மேலும் போர் பதற்றம் நிலவும் நேரத்தில், வான் வெளியை மூடாமல் பயணிகள் விமானங்களை பறக்க விட்டு அதனை பாதுகாப்பு கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இச்சூழலில் பாகிஸ்தான் கராச்சி, லாகூர் வான்வழிப் பகுதியில் பயணிகள் விமானத்தை பறக்க அனுமதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.