தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பொய் சொல்லக்கூடாது என பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியது ஆச்சரியமாக இருக்கிறது. 2 குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர்களுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை எனவும் டிஜிபி கூறியுள்ளார்.

குழந்தை திருமணம் நடந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என சட்டத்தில் இடம் இருக்கிறதா.? உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி குழந்தைகளை எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்த கூடாது. வீடு தேடி குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவலர்கள் மீதும் சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா.? சட்டத்தை மீறி குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்திருந்தால் அவர்கள் மீது போக்சோ சட்டம் பாய வேண்டும் அல்லவா.?

குழந்தை திருமணம் இரு குடும்பங்கள் புகார் கொடுத்து ஆறு மாதங்களுக்கும் மேலான நிலையில் இதுவரை அமைதி காத்து வந்த டிஜிபி ஆளுநர் ரவி அந்த விவகாரத்தை பற்றி பேசிய பிறகு மறுப்பு தெரிவித்தது ஏன்.? இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி என் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த டிஜிபி தயாரா.? அதுவரை பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மேலும் உண்மைகள் வெளிவந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.