பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் தனது 47வது ஒருநாள் சதத்தை விராட் கோலி விளாசி, ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய உலகின் 5வது கிரிக்கெட் வீரர் ஆனார்.

ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா –  பாகிஸ்தான் அணிகள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது. நேற்று தொடங்கிய இப்போட்டியில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும்  சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தனர்.

இந்திய அணி 100 ரன்களை கடந்த பின் ரோகித் சர்மா, கில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்னர். தொடர்ந்து திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. மேலும் மீண்டும் மழை வந்த காரணத்தால் ரிசர்வ் டேவான செப்டம்பர் 11, அதாவது இன்று பிற்பகல் 3 மணிக்கு  போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்திருந்தது. கோலியும் (8* ரன்கள்), ராகுலும் (17* ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், மீண்டும் கொழும்பில் மழை பெய்த காரணத்தால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, போட்டி 4:40 மணியளவில், ஓவர்கள் குறைப்பு இல்லாமல் மீண்டும் தொடங்கியது. அதன்படி தற்போது கே எல் ராகுலும், விராட் கோலியும் களமிறங்கி சிறப்பாக ஆடி சதமடித்தனர்.

இதில் கோலி தனது பரபரப்பான சதத்தின் போது பல சாதனைகளை பதிவு செய்தார். 34 வயதான நட்சத்திர பேட்டர் கோலி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தின் ரிசர்வ் நாளில் ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன்களை எட்ட 90 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. விராட் 50 ஓவர் கிரிக்கெட்டில் தனது 47 வது சதத்தை பதிவு செய்தார், இப்போது சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை விட 2 சதங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் (321 இன்னிங்ஸ்) சாதனையை 267 இன்னிங்ஸ்களில் 13,000 ரன்களை கடந்து  சாதனை படைத்தார்.  ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். கொழும்பு மைதானத்தில் விராட் கோலி கடந்த 4 ஒருநாள் போட்டிகளிலும்  128*(119), 131(96), 110*(116), 122*(94) ரன்களை விளாசியுள்ளார். 3 வகையான கிரிக்கெட் பார்மெட்டிலும் மொத்தம் 77 சதமடித்துள்ளார். இதில் சச்சின் 100 சதமடித்துள்ளார்.

இன்று தொடக்கத்தில் தாமதத்திற்குப் பிறகு ரிசர்வ் நாளில் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இந்திய இன்னிங்ஸைத் தொடங்கினர். இருவரும் சிறப்பான சதங்களுடன் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 233 ரன்கள் சேர்த்தனர், இந்தியா 50 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுக்க உதவியது. ஃபஹீம் அஷ்ரஃப் வீசிய கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் உட்பட தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளுடன் கோலி இன்னிங்ஸை முடித்தார் . கோலி 94 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 122* ரன்கள் எடுத்தார் மற்றும் ராகுல் 106 பந்துகளில் (12 பவுண்டரி, 2 சிக்ஸர்) 111* ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் இன்று தனது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுப்பை காயத்தால் இழந்தது, மேலும் அவர் இல்லாததை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர். ஷதாப் கான் மற்றும் ரவுஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர், ஆனால் கொழும்பில் கோலி மற்றும் ராகுல் அவர்களை வெளுத்து வாங்கினர். தற்போது பாகிஸ்தான் அணி களமிறங்கி ஆடி வருகிறது.

ODI வரலாற்றில் அதிக ரன்கள் :

சச்சின் டெண்டுல்கர் – 452 இன்னிங்ஸ்களில் 18426 ரன்கள்

குமார் சங்கக்கார – 380 இன்னிங்ஸ்களில் 14234 ரன்கள்

ரிக்கி பாண்டிங் – 365 இன்னிங்ஸ்களில் 13704 ரன்கள்

சனத் ஜெயசூர்யா – 433 இன்னிங்ஸ்களில் 13430 ரன்கள்

விராட் கோலி – 267 இன்னிங்ஸ்களில் 13000* ரன்கள்