2023-24 பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிச் சேர்க்கை மற்றும் பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பெண்களுக்காக மத்திய அரசால் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் சிறந்த ஆர்வத்துடன் சேமிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக துவங்கப்பட்ட நிலையான வருமான முதலீட்டு திட்டம் ஆகும்.

இது பொது வருங்கால வைப்புநிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) மற்றும் நிலையான வைப்புத்தொகை ஆகிய பிற முதலீட்டு விருப்பங்களை விட நிலையான வட்டி விகிதத்தை வழங்கும் ஒருமுறை முதலீட்டு வாய்ப்பாகும். மேலும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பை வழங்குவதன் வாயிலாக பெண்களின் அதிகாரத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

2 ஆண்டு கால திட்டமானது கவர்ச்சிகரமான மற்றும் நிலையான வட்டியான 7.5% வட்டியை காலாண்டுக்கு சுலபமான முதலீடு மற்றும் பகுதியளவு திரும்பப்பெறும் விருப்பங்களுடன் அதிகபட்ச உச்சவரம்பு ரூ.2 லட்சத்துடன் வழங்குகிறது. இது 1.59 லட்சம் தபால் நிலையங்களில் உடனே அமலுக்கு வரும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பெண்களை முதலீடு செய்வதை ஊக்குவிப்பதோடு அவர்கள் சேமிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி இத்திட்டம் அதிக முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.