
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ராம்நகர் மாவட்டத்தில் மாகவடி நகரில் வசித்து வருபவர் கீதா (46). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 2013 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கீதா மற்றும் அவரது மகள்களும் கணவரின் இறப்பின் பிறகு பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கணவர் இறப்பிற்கு முன் வாங்கிய கடனை அடைப்பது, இரண்டு மகள்களை வளர்ப்பது என பல சிரமங்களை சந்தித்துள்ளார் கீதா. கடன் தொல்லையால் அவதிப்பட்ட கீதா, மஞ்சுநாத் என்பவரிடம் உதவி கேட்டு சென்றுள்ளார்.
அப்போது மஞ்சுநாத் சிறுநீரகத்தை விற்றால் பணம் கிடைக்கும் அதன் மூலம் கடனை அடைக்க முடியும் எனவும் கூறியுள்ளார். அந்த யோசனைக்கு வேறு வழி இல்லாமல் இணங்கிய கீதா சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள யஸ்வந்த்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தனது சிறுநீரகத்தை கொடுத்துள்ளார். இதில் 2.5 லட்சம் பணம் கிடைத்துள்ளது. ஆனால் அதில் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே மஞ்சுநாத் கீதாவிற்கு கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை கொண்டு மீதம் இருந்த கடனை கீதா அடைத்துள்ளார்.
ஆனால் கடன் முடிவடைந்து விட்டது என நிம்மதியிலிருந்த கிதாவிடம் சில வாரங்களுக்கு பிறகு கொடுத்த பணத்தை தரும்படி மஞ்சுநாத் தொந்தரவு செய்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை எனில் இரண்டு மகள்களின் சிறுநீரகத்தையும் விற்பதற்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு கீதா மறுத்து விட்டதால் தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் கீதா காவல் நிலையத்தில் மஞ்சுநாத் மீது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது