திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானைக்கு சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றார். அப்போது திடீரென அந்த யானை, பாகன் உதயா மற்றும் சிசுபாலனை தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த சிசுபாலனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினர். பல முயற்சிகள் எடுத்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து யானையை வன அலுவலர்கள் சோதனை செய்தனர். பெண் யானைக்கு மதம் பிடிக்காது என்ற நிலையில், இவ்வாறு தெய்வானை நடந்து கொண்டது எதற்கு? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் வன அலுவலர் ரேவதி ரமணன் கூறியதாவது, திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை அமைதியானது. பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது. ஆனால் ஏன் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையில் யானை கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தார். அப்போது சிசுபாலன் மொபைல் போனில் செல்பி எடுக்க தெய்வானை அருகே நீண்ட நேரம் நின்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தெய்வானை சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியது.  அவரை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியது என்று அவர் தெரிவித்துள்ளார்.