
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இரட்டையர்கள் இருவரும் ஒரே பெயரும், ஒரே கல்வி சான்றிதழும் பயன்படுத்தி கடந்த 18 ஆண்டுகளாக அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனி பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் ஒரே பள்ளிக்கு இடமாற்றம் கோரியபோது இந்த மோசடி சம்பவம் வெளிவந்தது.
அந்த இரட்டை சகோதரிகளில் ஒருவர் உண்மையான பி.ஏ. மதிப்பெண் பட்டியலை பயன்படுத்தி வேலை பெற்றுள்ள நிலையில், மற்றொருவர் அதே ஆவணத்தை போலியாக நகலெடுத்து சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளார். அதன்பின் இருவரும் கடந்த 18 ஆண்டுகளாக தலா ரூ.80 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற்று வந்துள்ளனர். மொத்தமாக ரூ.1.60 கோடி வருமானம் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாமோ மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.கே. நேமம் கூறுகையில், “தனித்தனி ஆவணங்களை சரிபார்த்தபோது இருவரது விவரங்களில் வெகுவாக ஒற்றுமை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டையர்களில் ஒருவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மற்றவர் தலைமறைவாக உள்ளார்” என்றார். அந்த இருவரும் ஒழுக்கம், நெறிமுறை போன்ற பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாமோ மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆசிரியர்கள் போலி கல்வி சான்றிதழ்கள் மூலம் அரசு வேலை பெற்றிருப்பது தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்த விசாரணையின் போது, அவர்களுடைய கல்வி ஆவணங்களில் பல்வேறு முறைகேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து இதுவரை ரூ.22.93 கோடியுக்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, தற்போது 3 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 16 பேரும் இன்னும் அரசு பள்ளிகளில் பணியாற்றி வருவதை கண்டித்து பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான புகார்கள் போபால், ஜபல்பூர் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு கூட வந்துள்ளன, அவை வரும் ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொடர்ந்து சம்பளம் பெற்று கற்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.