தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை சந்தித்தார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் தற்காலிக தேர்தல் ஆலோசகராக செயல்பட இருக்கும் நிலையில் இந்த சந்திப்புக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் திருநர் அணி 9-வது இடத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருநங்கைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் குழந்தைகள் என்ற அணி இருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுத்த கூடாது என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.
அப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் குழந்தைகள் அணியை தமிழக வெற்றி கழகம் உருவாக்கியுள்ளது என்று கேள்வி எழும்பிய நிலையில் இது தொடர்பாக நேற்று பழனியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, தேர்தல் விதிமுறைகளின் படி 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுத்தக் கூடாது. அந்த கட்சியில் எதற்காக குழந்தைகள் அணியை உருவாக்கினார்கள் என்று கேட்கும்போது அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே குழந்தைகள் தான் என்று கூறுகிறார்கள்.மேலும் குழந்தைகள் அணி எதற்காக உருவாக்கப்பட்டது அதன் நோக்கம் என்ன என்பது அவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம். இது தொடர்பாக அவர்கள் விளக்கம் கொடுத்தால் மட்டும்தான் தெரியவரும் என்றார்.
