சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் பாஜகவின் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அதில் கலந்து கொண்டார். அதன் பிறகு கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்றம் என்பது விவாதம் செய்வதற்கான இடம் என்பதால் தான் எதிர்க்கட்சிகள் சில கேள்விகளை கேட்கிறார்கள். அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது தான் அரசின் கடமை. தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி என்பது வேறு. வீக்கம் என்பது வேறு.

குஜராத்தில் அதானி என்ற தொழிலதிபர் வளர்வதற்கு பதில் வீங்கி கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய வளர்ச்சி அந்த நிறுவனத்திற்கு எப்படி கிடைத்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் சரியான முறையில் பதில் சொல்லாததால் தான் நாங்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதனால்தான் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுகிறோம். தமிழகம் முழுவதும் வருகின்ற 15-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 20-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறும். மேலும் இறுதியாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.