உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) தலைவராகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த போர்கே பிரென்ட், அமெரிக்கத் தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகளின் எதிரொலியாகத் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மர்மமான முறையில் உயிரிழந்த எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், போர்கே பிரென்டின் இந்த முடிவு சர்வதேச வர்த்தக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
எப்ஸ்டீன் விவகாரத்தில் தனது பெயர் அடிபடுவதால் ஏற்பட்ட கடும் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கிய அமைப்பின் தலைவர், இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி விலகியிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இவருக்குப் பின் இந்த இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்றும், இந்த விவகாரம் இன்னும் எத்தனை ‘பெரிய தலைகளை’ காவு வாங்கப் போகிறது என்றும் உலக நாடுகள் இப்போது உற்றுநோக்கத் தொடங்கியுள்ளன.
