தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது படங்களில் அம்மா வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் நடித்த ராஜமாதா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு ஏராளமான ரசிகர்கள் பெருகினர்.

இன்று வரை படையப்பா திரைப்படம் மற்றும் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் படையப்பா படத்தை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டியில் படையப்பா திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அதாவது படையப்பா திரைப்படத்தில் முதலில் வில்லியாக மீனாதான் நடிக்க இருந்தாராம். ஆனால் மீனா மற்றும் ரஜினி அப்போது பெஸ்ட் ஜோடி என்று ரசிகர்கள் கூறி வந்ததால் ரஜினிக்கு வில்லனாக தான் நடித்தால் தன்னுடைய மார்க்கெட் சரிந்து விடும் என்று கூறி மீனா படையப்பா படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

அதன்பிறகு நடிகை நக்மாவை நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அப்போது நக்மா வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் அவராலும் படையப்பா திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து தான் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் பட குழு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தற்போது கே.எஸ் ரவிக்குமார் கூறிய நிலையில், நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்ணனை தவிர வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.