
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்திற்கு அடுத்த கள்ளிக்குடி தாலுகாவான வில்லூரில் கடந்த 12 ஆம் தேதி மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் சில்வர் தட்டு மற்றும் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்த பிரியாணி பார்சல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மக்கள் தன் வீட்டிற்கு கொண்டு சென்று தங்களது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர். பிரியாணியை சாப்பிட்ட அனைவருக்கும் திடீரென வாந்திமயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக வில்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் என்பதால் மருத்துவமனையில் இடம் போதாதால் 10 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கள்ளிக்கொடி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிரியாணி செய்து வெகு நேரமானதால் பாய்சனாக மாறியுள்ளது. அதனால் தான் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பெரிய பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். திருமங்கலம் ஏஎஸ்பி அன்ஷல் நாகர் தலைமையில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.