
திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) லட்டு விநியோகத்தில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இனிமேல், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், தரிசன டிக்கெட் இல்லாவிட்டால், தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகுதான் லட்டு பெற முடியும். இந்த புதிய விதிமுறை, லட்டு விற்பனையில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின்படி, தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும். தேவைப்பட்டால், 24 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இரண்டு லட்டுகளை பெறலாம். தரிசன டிக்கெட் உள்ள பக்தர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
TTD கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சௌத்ரி, இந்த புதிய விதிமுறையானது, லட்டு விற்பனையில் கள்ளச் சந்தையை கட்டுப்படுத்த உதவும் என்றும், பக்தர்களுக்கு எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த புதிய விதிமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.