ஐசிசி உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து இலங்கையை நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தோற்கடித்ததால் பாகிஸ்தான் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. 172 என்ற இலக்கை 23.2 ஓவரில் நியூசிலாந்து அணி சேஸ் செய்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 99.9% அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஏற்கனவே இந்தியா தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு சென்றுள்ள நிலையில் நான்காவது அணியாக நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்.. பாகிஸ்தான் அணியினர் இலங்கையை ஆதரித்தனர், மேலும் மழைக்காக கூட பிரார்த்தனை செய்திருக்கலாம். ஆனால் எல்லாம் வித்தியாசமாக நடந்தது. தற்போது நல்ல ரன்ரேட்டில் நியூசிலாந்து அணி உள்ளது..

பாகிஸ்தான் அணிஅரை இறுதி  செல்ல வேண்டும் என்றால் நாளை இங்கிலாந்து அணியை அசாத்தியமான முறையில் வீழ்த்த வேண்டும் ஆனால் இப்படி நடப்பது சாத்தியமில்லை என்று தான் தோன்றுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்..

ஏ ஸ்போர்ட்ஸில் வாசிம் அக்ரம் கூறுகையில், “இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க வேண்டும், பின்னர் இங்கிலாந்து அணியை டிரஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி அவர்களை டைம் அவுட் செய்ய வேண்டும்” என்று கிண்டலாக கூறினார். சமீபத்தில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வங்கதேச அணியால் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டைம் அவுட் செய்யப்பட்டார் இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.