தமிழ்நாட்டில் செயல்படும் 60,000 பள்ளிகளில், 13,000 பள்ளிகள் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளாக இயங்குகிறது. 1500 பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் செயல்படுகிறது. இந்த பள்ளிகள் தமிழக பள்ளிக்கல்வித்துறையிடமிருந்து என்ஓசி என்ற சான்றிதழ் பெற்று சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் தமிழக அரசிடமிருந்து அங்கீகாரம் பெறுவதோடு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் பெரும்பாலான பள்ளிகள் தங்களுடைய அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதற்கட்டமாக 300 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அங்கீகாரத்தை புதுப்பிக்காதது குறித்து முறையாக விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அவற்றை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதை செய்யாத பள்ளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.