பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து அமோக வெற்றி பெற்றது. இந்த படம் ஜப்பான் நாட்டில் 100 நாட்கள் ஓடியது. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஸ்ரேயா சரண், ஆலியா பட் மற்றும் அஜய் தேவகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டுகூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ள நிலையில், ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலிலும் நாட்டுக்கூத்து பாடல் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

அதாவது ரோட்டன் டொமெட்டோஸ் என்ற ஹாலிவுட் வெப்சைட் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களின் ரேட்டிங் என்ன என்பதை தெரிவிக்கும். அதோடு சிறந்த படங்களுக்கு கோல்டன் டொமேட்டோ விருதையும் வழங்கி கௌரவிக்கும். அந்த வகையில் தற்போது ரசிகர்களிடம் எந்த படம் உங்களை அதிக அளவில் கவர்ந்தது என்று நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில் முதல் இடத்தை ஆர்ஆர்ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. அதன் பிறகு 2-ம் இடத்தை டாப் கன் என்ற படமும், 3-வது இடத்தை எவ்ரிதிங் எவ்ரி வேர் ஆல் அட‌ஒன்ஸ் என்ற படமும், 4-வது இடத்தை த பேட்மேன் என்ற படமும் பிடித்துள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற அவதார் 2 திரைப்படம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.