டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் (Red Fort) நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தால் அந்தப் பகுதி தற்போது செய்திகளில் அடிபட்டு வருகிறது.
ஆனால், பல வருடங்களுக்கு முன்பே அதே செங்கோட்டைக்கு அருகில் ‘தான் சிங் கி பாட்ஷாலா’ (Than Singh Ki Pathshala) என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, அறிவொளியைப் பரப்பிய உன்னத மனிதரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
அவர்தான் டெல்லி போலீஸ் கான்ஸ்டபிளான தான் சிங் (Than Singh). இவர், வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளித்து, பலரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளார்.
தான் சிங், ராஜஸ்தானின் பரத்பூரில் பிறந்து, டெல்லியின் குடிசைப் பகுதியில் வளர்ந்தவர். அவரது தந்தை சலவைத் தொழிலாளி மற்றும் மக்காச்சோளம் விற்றவர். வறுமையிலும், தான் படித்து 2009ஆம் ஆண்டு டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஆனார்.
2013ஆம் ஆண்டு, செங்கோட்டைப் பகுதியில் சிலர் பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கேலி செய்வதைக் கண்டார். குப்பை பொறுக்குதல், பிச்சை எடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடும் இந்தக் குழந்தைகள், படிப்பறிவு இல்லாததால் தவறான பாதைக்குச் செல்கிறார்கள் என்பதை உணர்ந்துள்ளார்.
அதையடுத்து, 2015ஆம் ஆண்டு, தன் போலீஸ் பணிக்கு நடுவிலும், இவர் தன் சொந்தப் பொறுப்பில் பெற்றோரைச் சம்மதிக்க வைத்து, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் நடத்த இந்தப் பள்ளியைத் தொடங்கினார்.
