
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. இது நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு பேசினார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது. அதன் பின் இன்று மக்களவையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, குடியரசு தலைவர் மீதான விவாதத்தில் எதிர்மறை கருத்துக்கள் உள்ளது. மற்றவர்களைப் போல சொகுசு மாளிகையில் நாம் வாழவில்லை. மாளிகையில் வாழாமல் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். மற்றவர்களைப் போல மாளிகை கட்டிக் கொடுக்காமல், ஏழைகளின் வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு கொடுத்துள்ளேன்.
சில கட்சி தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி மற்றும் ஷவர்களில் கவனம் செலுத்துகின்றனர். நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பாஜக அரசு மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது சிலருக்கு பொழுதுபோக்காகி விட்டது. அவர்களின் வீட்டிற்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக வைத்துள்ளனர்.
அவர்களுக்கு ஜனாதிபதியின் உரை அலுப்பூட்டுவதாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.