அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கடல் நீர் உள்வாங்கியது. இதன் காரணமாக கடற்கரையில் புனித  நீராட வந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் ஆங்காங்கே வெளியே தெரிந்த பாறைகள் மீது ஏறி விளையாடியும் சிப்பிகள் சேகரித்தும் மகிழ்ந்தனர்.

இன்று வரை கடல்நீர் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், திடீரென்று கடலின் ஆழமானப் பகுதிகளில் காணப்படும் கடல் பாசிகள் சுமார் 1 டன் அளவில் கோயில் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியது. இதனிடையே மிகுந்த துர்நாற்றம் வீசும் இந்த கடல் பாசிகள் நிறைந்த பகுதியில் நீராடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் அரிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பின் குடும்பத்தினருடன் வந்த பக்தர்கள் கோயில் கடற்கரை பகுதியில் நீராடாமல் அருகில் உள்ள அய்யா வைகுண்டர் கோயில் கடற்கரையில் கடல் பாசிகள் இல்லாத இடங்களில் நீராடினர். இவ்வாறு துர்நாற்றம் வீசும் கடல் பாசிகளால் ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூரின் பெருமையானது பாதிக்கப்படும். ஆகவே உடனே கோயில் நிர்வாகம் கடற்கரை பகுதியிலிருந்து கடல் பாசிகளை அப்புறப்படுத்திட வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.