நடிகர் சிம்புவின் பத்து தல படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பத்து தல படம் பார்க்க ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இருவர் வந்திருந்தனர். அப்போது டிக்கெட் இருந்தும் திரையரங்க ஊழியர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர்.

திரையரங்கில் தீண்டாமை கொடுமை என இந்த வீடியோ பரவிய நிலையில், இவ்விவகாரம் நிர்வாக கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர்கள் படம் தொடங்குவதற்கு முன்பே உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சீர்யா விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட் செய்துள்ள அவர், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அவர்கள் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.