
மதுரை தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது நாட்டின் பாதுகாப்புக்காக போராடிய இந்திய ராணுவ வீரர்களையும், பிரதமர் மோடியையும் பாராட்டும் விதமாக மூவர்ணக்கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு. அதற்கும் பாஜகாவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நெருப்பு இல்லாமல் புகையாது, டாஸ்மாக்கில் புகார்கள் இருப்பதால்தான் சோதனை நடக்கிறது. தவெக தலைவர் விஜய், பாஜகவுடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று கூறுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.
தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் அனைவரும் ஓரணியாக இணைந்தால் எளிதாக முடியும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது அப்போது பாஜக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். 2026ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். அவர் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது ஆனால் அதை தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்களிடம் தான் உள்ளது.
நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை யாரும் குறை சொல்லக்கூடாது. ஓ பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருக்கிறார். அதில் எதுவும் சந்தேகம் இல்லை. அவர் கூட்டணியில் இருப்பதால் அமித்ஷா சென்னைக்கு வந்தபோது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.