பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதாகவும் பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான வீடியோக்கள் உண்மையில்லை எனவும் அவை போலியாக பரப்பியவை எனவும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாகவே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் குவிந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே திருப்பூர் மாவட்ட எஸ்பி சசன் சாய் வட மாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் பேசிய வடமாநில தொழிலாளியான உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கூறியதாவது, நான் திருப்பூரில் ஐந்து வருடங்களாக இருந்து வருகிறேன். இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ரூமில் தங்கி வேலைக்கு சென்று வருகிறேன். ஹோலி பண்டிகைக்காக சிலர் சென்ற சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர் அவர்கள் மீண்டும் இங்கே வருவார்கள் என தெரிவித்துள்ளார்.