உசிலம்பட்டியில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் கும்பலால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டி பங்களா மேடு பகுதியை சேர்ந்த புது ராஜா செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி கீதா லட்சுமி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று பகலில் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இவர்களது 12 வயது மகள் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில்,  பகல் ஒரு மணியளவில் புது ராஜாவின் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதாக கூறி நான்கு பெண்கள் வந்துள்ளனர். பின் வீட்டிலிருந்த சிறுமியிடம் தண்ணீர்  தரும்படி கேட்டுள்ளனர்.

பின் சிறுமிடம்  பேச்சு கொடுத்து அவரை திசை திருப்பி வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 11 1/2 சவரன் தங்கம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். பின் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த புது ராஜா, கீதாலட்சுமி தம்பதி வீட்டின் பீரோ திறந்து இருப்பதைக் கண்டு சோதனை செய்தபோது அதிலிருந்த பணம் மற்றும் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து, 

தனது மகளிடம் நடந்ததை கேட்டறிந்த பின், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள்  அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு கண்டதோடு தொடர் விசாரணையில் ஈடுபட்டு குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.