
மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் நகரில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் ஆர்டிஸ்ட் பெட் என்ற இளைஞர் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிலையில் மணமகனின் உறவினர்கள் சிலர் இசைக்கப்பட்ட பாடலை மாற்ற விரும்பினர். ஆனால் மணமகளின் உறவினர்கள் சிலர் இதை மறுத்து உள்ளனர். இதனால் மணமகன் மற்றும் மணமகளின் வீட்டாருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் வாக்குவாதம் முடிவில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து குடிபோதையில் இருந்த மணமகனின் உறவினர் அங்கு நின்ற இசை கலைஞர் ஆர்டிஸ்ட் பெட்டை கத்தியால் குத்தி உள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கலைஞர் கீழே சரிந்தார். இதனை அடுத்து மணமகளின் தந்தை திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து மணமகளின் தந்தை மற்றும் உறவினர்கள் மணமகனின் வீட்டாரை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் கலைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், கலைஞரின் மாமா அபினாஷ் பெட் மணமகனின் உறவினர் மூவர் கலைஞரை கத்தியால் குத்தியதாக சாட்சி கூறினார்.
அதன்படி கலைஞரை கத்தியால் குத்திய மூன்று நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட கலைஞரின் மார்பின் வலது பக்கத்தில் ஆழமான கத்திக்குத்து காயங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.