
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இன்று வரையிலும் இதற்கு ஒரு முடிவு வராமல் போர் நீடித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவதாக அதிபராக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி மூலமாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சு வார்த்தையில் உக்ரைன் போரில் ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருவதாகவும், இதனை தடுப்பது குறித்தும் விரிவாக பேசப்பட்டது. போரை நிறுத்தும் நோக்கில் ட்ரம்ப் விரைவில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, உக்ரைனில் சண்டையை நிறுத்த புதின் விரும்புகிறார் என நான் நம்புகிறேன்.
புதினை விரைவில் சந்தித்து பேச காத்திருக்கிறேன். இதற்கான நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. விரைவில் நடக்கும். இந்த சந்திப்பு குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜலன்ஸ்கியும் போர் நிறுத்தத்திற்கு விரும்புகிறார். ரஷ்ய அதிபருடனான சந்திப்பில் உக்ரைன் அதிபரும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கூறினார். போரை முடிவுக்கு கொண்டு வர சவுதி அரேபியாவுடன் அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாகவும், இதனால் விரைவில் போர் முடிவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.