கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இந்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையின் போது கள்ள நோட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்கி டாக்கிகள், கவுண்டிங் மெஷின், 85 ஆயிரம் கள்ள நோட்டுகள், ஏர்கன் பிஸ்டல், ஏர்கன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு அந்த இடத்தில் ரிசர்வ் வங்கி முத்திரை, காவல்துறை சீருடை போன்றவற்றையும் காவல் துறையினர் கைப்பற்றிய நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை தொடர்ந்து கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவாக இருந்த நிலத்தின் உரிமையாளரான விசிக நிர்வாகி செல்வம் தலைமறைவானது தெரியவந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் செல்வத்தை திருமாவளவன் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.