
கொல்கத்தாவில் உள்ள சாரு மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பவுரி (22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடை உரிமையாளரின் வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவுரி ஓரினச் சேர்க்கையாளர் டேட்டிங் செயலி மூலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள பருய்பூரைச் சேர்ந்த ஆலம்(30) என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆலம், பவுரியை பார்ப்பதற்காக அவரது வாடகை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்குள்ளும் பணம் குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலம் சமையலறையில் உள்ள தத்தியால் பவுரியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், பவுரியின் மேல் மார்பு, கழுத்து, முகம் மற்றும் இடது தோளில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் ஆலம் பல கேட்டரிங் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தவர் என்பதும், பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் ஒரு பிரபல உணவகத்தில் வேலை செய்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து ஆலம் கைது செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.