ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக கட்சி சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லக்ஷ்மியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்தும் பிரச்சாரத்தில் பெரியார் குறித்து பேசி வருகிறார். மேலும் கட்சித் தலைவர்கள் கருத்துக்கு மிகவும் கடுமையான வகையில் பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் சீமானை தடை செய்ய வேண்டும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் கடுமையான மற்றும் மோசமான வார்த்தைகளை அவர் பேசுகிறார். திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களை மிகவும் கொச்சைப்படுத்தி ஏளனமாக பேசுகிறார். அதோடு பிரச்சாரத்தின் போது ஜாதி, மதம், இனம் தொடர்பாக சர்ச்சை கருத்துக்களை பேசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் செயல்கள் உள்ளது. நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை திரும்ப பெற்று கட்சியை தடை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.