ஹவாய் தீவுகளில் தனது மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் ஜெரார்ட் கோனிக், நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என திங்களன்று மறுப்பு தெரிவித்தார். கடந்த மாதம் ஹவாயில் நடந்த ஹைக்கிங் பயணத்தின் போது, தனது மனைவியை செல்ஃபி எடுக்க அழைத்துக் கொண்டு வந்து, தலையில் கல்லால் 10 முறை அடித்ததாகவும், பின்னர் மண் மீது தள்ளி முகத்தை அழுத்தியதாகவும் அரியேல் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலின் போது, அருகிலிருந்த ஒரு பெண் சாட்சியர், “உதவி” என்று மனைவி கத்தும் சத்தத்தை கேட்டு ஓடி வந்ததையும், அந்த சாட்சியரை பார்த்தவுடன் கோனிக் தாக்குதலை நிறுத்தியதையும் குற்றவியல் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்குள்ளான அரியேல் கோனிக் பல இடங்களில் காயமடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு அவர் வாக்குமூலத்தில், இந்த தாக்குதல் திட்டமிட்டு செய்யப்பட்டதென்று கூறியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாகக் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தலை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜெரார்ட் கோனிக் மீது இரண்டாம் நிலை கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது வேலை வழங்குநராக இருந்த Anesthesia Medical Group நிறுவனம், அவரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்துவிட்டதாக கூறியுள்ளது.

கோனிக் முன்பு பிட்ட்ஸ்பர்க் நகரத்தில் உள்ள யுபிஎம்சி மருத்துவமனையில் அனஸ்தீசியா மருத்துவராகவும், பல்கலைக்கழக ஆசிரியாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் ஓஹூ சமூக திருத்தக் கழகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.