
மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநில துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் தலைமைச் செயலகமான மந்தராலயாவின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முயற்சித்தனர். “தங்கர்” என்ற சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த செயலில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிர அரசின் முக்கிய தலைவர்கள், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்ட அமைச்சரவை கூட்டத்துக்கு முந்தையதாக இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்நிலையில், விரைந்து செயல்பட்ட காவல்துறை மாடிகளுக்கு இடையே பாதுகாப்பு வலைவிரித்து, குதித்தவர்களை பாதுகாப்பாக கீழிறக்கி, யாருக்கும் காயங்கள் இல்லாமல் காப்பாற்றினர். இந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினர் பட்டியலில் “தங்கர்” பிரிவை சேர்க்கும் நடவடிக்கைகள் அரசியல் தலைவர்களுக்கு இடையே முற்றிலும் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது.