
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் திருமணமான 24 மணி நேரத்திலேயே மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தலைமறைவால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், பிவார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிவார் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞரின் திருமணம் கடந்த மே 17 ஆம் தேதி ஜலால்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் திருமணத்தையடுத்து மே 18 ஆம் தேதி மணமகளை மணமகனின் வீட்டிற்கு அழைத்துவந்தனர்.
அதற்கு மறுநாள் மே 19ஆம் தேதி இரவு, மணமகள் தனது மைத்துனரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த சமயத்தில் மணமகன் வெற்றிலை வாங்க வெளியே சென்றிருந்த நேரத்தில், மைத்துனருடன் காரில் ஏறி தப்பியோடியுள்ளார். அதற்கு அவரது நண்பர்களும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மணமகனின் தந்தைகூறியதாவது, அந்த பெண் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் அணிந்திருந்ததாகவும், அவற்றுடன் தப்பிச் சென்றதாகவும் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து மணமகளை மைத்துனரின் வீட்டிலிருந்து மீட்டனர்.
மேலும் இதுகுறித்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தனது மாமியார் தன்னை குற்றம் கூறி, அடித்ததாகவும், வரதட்சணை குறைவாக கொண்டு வந்ததற்காக தன்னை சிறுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
தற்போது போலீசார் இருதரப்பினரையும் சந்தித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மைத்துனரையும் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி அழைத்துள்ளதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.