தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஆளும் அரசை சீண்டி வருவது தொடர் கதையாக மாறி வருகின்றது. ஆளுநருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆளும் அரசுகள் போராட்டம் நடத்தினாலும்…. ஆளுநரை கண்டித்து கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினாலும்…. ஆளுநருக்கு எதிராக மத்திய அரசிடம் புகார் அளித்தாலும் ஆளுநரின் செயல்பாடு கொஞ்சம் கூட மாறியது இல்லை.

ஆளுநருக்கு எதிராக எப்படி எதிர்ப்பு தெரிவித்தாலும் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், மாநில அரசுகளை விமர்சிப்பது, மாநில அரசின் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிப்பதை ஆளுநர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என் ரவியும் இதையே வாடிக்கையாக வைத்துள்ளார். ஆளும் அரசை விமர்சனம் செய்வது, ஆளும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவது என ஆளும் அரசோடு மல்லுக்கட்டி வரும் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு ஆளும் திமுக வினரை எரிச்சல் அடைய வைத்ததோடு மட்டுமல்லாமல் திமுக கூட்டணி கட்சியினரையும் கண்டிக்க வைத்துள்ளது.

இன்று  உதகை பல்கலைக்கழகத்தில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, நாம் கேட்பதாலோ,  நேரில் சென்று தொழில்களுடன் பேசுவதாலும் முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில்  அமைப்புக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று பேசி உள்ளார். சமீபத்தில் தான் முதல்வர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்.  இதனை குறிப்பிட்டு ஆளுநர் பேசியுள்ளது முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்லாது, திமுக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், திமுக கூட்டணி கட்சிகள் என அனைவரையும் கடுப்பாக்கி, ஆளுநர் மீது எரிச்சலை உண்டாக்கி உள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.