பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது நடிகர் கமல்ஹாசன் “தக் லைப்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 234 வது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, சிம்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் ஜூன் 5ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, திரிஷா, கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சிம்பு மணிரத்னம் குறித்து பேசினார். அவரிடம் மணிரத்னம் மீதுள்ள பயத்தின் காரணமாக படப் பிடிப்பிற்கு சீக்கிரம் செல்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு எனக்கு மணிரத்னம் சாரை ரொம்ப பிடிக்கும். சீக்கிரம் செல்வது பயத்தினால் இல்லை. நாம் ஒரு இயக்குனரை நம்பி செல்கிறோம் என்றால் முதலில் அவர்கள் சொன்ன நேரத்திற்குள் சரியாக வர வேண்டும். அப்போதுதான் நடிகர்களின் நேரம் வீணடிக்கப்படாமல் சரியான நேரத்தில் படம் வெளியாகும். இதனை மணிரத்னம் சார் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.

இப்படி இருக்கும்போது யார் தான் சரியான நேரத்திற்கு வராமல் இருப்பார்கள்” என்று கூறினார். “இவரைப் போல் இயக்குனர் எனக்கு கிடைத்திருந்தால் நான் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பேன். நிறைய படங்களில் நடித்திருப்பேன்” என்று கூறினார்.