குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டம் தீசா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிப்பு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து, அருகிலுள்ள பட்டாசு கிடங்கிலும் பரவியதையடுத்து பெரிய அளவில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது.

இதில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது 200 மீட்டர் தொலைவிற்கு பட்டாசுகள் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் பலர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 13 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. வயல்களில் மனித உடல் பாகங்கள் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.