சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுழைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மத்திய மற்றும் புதிய மருத்துவ கட்டமைப்பு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் சுகாதாரத் துறையில் புதிய நியமனங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணைகளையும் வழங்கியுள்ளார். ரூ.1,136 கோடி மதிப்பில் 44 புதிய மருத்துவமனைகளில் கட்டுமான பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் அனைவருக்கும் போதிய தண்ணீர், உயர்தர மருத்துவம் மற்றும் உயர்தர கல்வி என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு வெற்றிகரமாக பயணித்து வருகிறது. நாளை மார்ச் 1 என்னுடைய 70ஆவது பிறந்தநாள். சுமார் 52 ஆண்டு காலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் நீங்கள் என்னவாகி  இருப்பீர்கள்? என்று என்னை கேட்ட போது அரசியலில் தான் நிச்சயம் இருந்திருப்பேன் என பதில் அளித்தவன் நான். அதாவது கிடைக்கின்ற பொறுப்புகளில் மக்களுக்கு சேவையாற்றும் இலக்குகளை எல்லா காலத்திலும் எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன். அந்த இலக்கை அடைவதற்கு என்னாளும் உழைத்து வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.